சிதம்பரம்: சிதம்பரம் அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் பஸ் மோதிய விபத்தில் 18 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அருகே உள்ள கண்ணனூர் கிராமத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் 40க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த பஸ்சை டிரைவர் ராஜேஷ் ஓட்டி வந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பு.முட்லூர் வெள்ளாற்று பாலத்தின் அருகே இன்று காலை சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் வெள்ளாற்று பாலம் துவங்கும் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
பின்னர் மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்ததால் பஸ் கட்டையிலேயே இழுத்துச் சென்று அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காயமடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பக்கவாட்டு கட்டையில் சிக்கிய பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
