சேலம்: பெங்களூரு-மதுரை பைபாஸ் சாலையில் சேலம் கந்தம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் அருகே தனியார் பைக் ஷோரூம் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்குவங்க மாநில பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் வந்தது. பெங்களூருவில் இருந்து சேலம் வழியே மதுரை நோக்கிச் சென்ற அந்த காரின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால், காரை ஓட்டி வந்த வாலிபர், சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அவருடன் மற்றொரு வாலிபரும் இறங்கி நின்றார்.
அடுத்த சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பினர். சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் சோதனையிட்டபோது, 400 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
