×

கூடலூர் அருகே கோசாலையில் புகுந்து மாடுகளை தாக்கிய புலி: முதுமலை காப்பக கள இயக்குனர் ஆய்வு

கூடலூர்: கூடலூர் அருகே கோசாலையில் புகுந்த புலி தாக்கியதில் 2 மாடுகள் காயமடைந்தன. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி அடுத்த மாவனல்லா பகுதியில் வசித்த நாகியம்மாள் என்பவர் கடந்த 24ம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மூதாட்டியை புலி தாக்கிய பகுதியில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று புகுந்த புலி 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின்கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனவே இப்பகுதியிலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர். புலியை கண்காணிக்க வனத்துறை தனிப்படை அமைக்கப்பட்டு 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகள் தினசரி பள்ளிக்கு வனத்துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிப்பது குறித்து நேற்று மாலை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருபா சங்கர், இணை இயக்குனர் கணேசன் ஆகியோர் வனத்துறையினருடன் இணைந்து இப்பகுதியில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு அறிக்கை வனத்துறை முதன்மை வன உயிரின பாதுகாவலருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Gudalur ,Mudumalai Wildlife Sanctuary Field ,Nagiyammal ,Mavanalla ,Masinakudi ,Gudalur, Nilgiris district ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்