புதுடெல்லி: எத்தியோப்பாவில் எரிமலை வெடித்து சிதறிய நிலையில் அதில் இருந்து வெளியேறிய சாம்பல் மேகங்களில் கலந்து இந்திய வான்வெளியையும் சூழ்ந்தன. இதன் காரணமாக விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலிகுப்பி எரிமலை, சுமார் 12ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஞாயிறன்று வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து கடும் சீற்றத்துடன் கரும்புகை வெளியேறத் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எரிமலையில் இருந்து எழுந்த கரும்புகை அந்த பகுதியை முழுவதுமாக சூழ்ந்தது. மேலும் எரிமலையில் இருந்து தொடர்ந்து வெளியேறிய கரும்புகை மற்றும் சாம்பலானது வானில் சுமார் 15கிமீ உயரத்துக்கு சூழ்ந்தது. இதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த சாம்பல் மேகத்தின் தாக்கம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சாம்பலானது மேகங்களுடன் கலந்து செங்கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமன் வரை சென்றது. மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் நகர்ந்த இந்த சாம்பல் கலந்த மேகக்கூட்டம் பின்னர் அரபிக்கடல் வழியாக பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து இந்தியாவின் வான்வெளிக்குள் நுழைந்தது.
குஜராத்திற்குள் நுழைந்த எரிமலை சாம்பல் மேகங்கள் ராஜஸ்தான் டெல்லி, அரியானா, பஞ்சாப் நோக்கி நகர்ந்தது. இதனால் அந்த மாநிலங்களின் வான்பரப்பிலும் சாம்பல் மேகங்கள் சூழ்ந்து கரும்மேகமூட்டம் போன்று காணப்பட்டது. இந்தியாவிற்குள் எரிமலை சாம்பல் நுழைந்த நிலையில் அதன் நகர்வு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்த எரிமலை சாம்பலில் சல்பர் டை ஆக்சைடு, பாறையின் சிறிய துகள்கள் இருப்பதால் வானம் வழக்கத்தை விட இருட்டாகவும், அதிக மேகமூட்டத்துடன் மாறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமானது, எரிமலை சாம்பலால் பாதிக்கப்பட்ட வான்வெளியை தவிர்க்க வேண்டும் என்றும் பயணத்திட்டத்தை மாற்றி அமைக்கும்படியும் அறிவுறுத்தியது. மேலும் விமானத்தில் இயந்திர முரண்பாடுகள், கேபினில் புகை அல்லது துர்நாற்றம் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டால் சாம்பல் பாதிப்பாக இருக்கும் என்பதால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், ‘‘ சாம்பல் மேகங்கள் சீனாவை நோக்கி நகர்ந்து வருகின்றன, செவ்வாய்கிழமை இரவுக்குள் இந்திய வான்வெளியில் இருந்து அவை விலகிச் செல்லும்” என்று கூறினார்.
* சென்னையில் விமான சேவை பாதிப்பு
சாம்பல் மேகம் எதிரொலி காரணமாக சென்னை விமான நிலையத்திலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது. நேற்று காலை மும்பை செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை -மும்பை விமானம் மட்டுமின்றி டெல்லி-ஐதராபாத், மும்பை-ஐதராபாத், மும்பை-கொல்கத்தா விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தாமதமாக வந்து தாமதமாக புறப்பட்டுச்சென்றது.
* ஹேலிகுப்பி எரிமலை எத்தியோப்பியாவில் அபார் மாகாணத்தில் உள்ளது.
* மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் இந்த சாம்பல் மேகங்களுடன் கலந்து நகர்ந்தது.
* 12ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் கடந்த ஞாயிறன்று சாம்பலை கக்க துவங்கியது.
* செங்கடல் வழியாக ஏமன் மற்றும் ஓமனை கடந்து இந்தியாவுக்குள் இந்த மேகங்கள் புகுந்தன.
* கரும்புகை மற்றும் சாம்பல் வானில் சுமார் 15கிமீ உயரத்துக்கு சூழ்ந்தது.
* பின்னர் இந்தியாவை கடந்து சீனாவுக்கு சென்றது.
* விமானங்கள் ரத்து
எரிமலையின் சாம்பல் மேகத்தினால் பல்வேறு விமான நிறுவனங்களை சேர்ந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அகாசா ஏர் விமான நிறுவனமானது, ஜெட்டா, குவைத், அபுதாபிக்கு புறப்பட இருந்த விமானங்களை ரத்து செய்தது. இண்டிகோ விமான நிறுவனமும் இந்த சூழலை சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனமானது சில சர்வதேச விமானங்கள் உட்பட 13 விமானங்களை ரத்து செய்தது. நெதர்லாந்தின் கேஎல்எம் விமான நிறுவனம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை ரத்து செய்தது. சில சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை பாகிஸ்தான் வான்வெளி வழியாக திருப்பிவிட்டன. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவது இல்லை என்பதால் விமானங்கள் ரத்து மற்றும் தாமதத்தை சந்தித்தன.
