சென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் பணிக்கான தமிழகம் வருகை தந்த நிலையில், காங்கிரஸ் பொறுப்பாளர் ராகுல் ஷர்மா நேற்று முதல் மாவட்டமாக காஞ்சிபுரத்துக்கு வருகை தந்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்து ராகு ஷர்மா கூறியதாவது: இந்தியா முழுவதும் காலியாக உள்ள மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள். மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்கும் பணியில் எந்த ஒரு முன்னாள் அமைச்சர் அல்லது மாநில தலைவர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் சென்று கட்சிக்காக உழைப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன், முன்னாள் மாவட்ட தலைவர் மதியழகன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குரு, கட்சி மேற்பார்வையாளர் அசோக், பார்வையாளர் இளையராஜா, மாவட்ட பொருளாளர் மோகன் வெங்கடேசன், மாநகர செயலாளர் மாநகர தலைவர் நாதன், நிர்வாகிகள் பத்மநாபன், யோகி சையத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
