சென்னை: அதிக மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனை, நூல் நிலையங்கள் என திமுக அரசின் திட்டம், சாதனைகளை கொளத்தூர் தொகுதிக்கு படைத்து வழங்கி இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 15 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா ஏற்பட்டபோது நாம் எதிர்க்கட்சியில் இருந்தோம்-கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, பணிச்சூழல் பெருமளவில் மாறிவிட்டது. குறிப்பாக, ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள்- வொர்க் ப்ரம் ஹோம் செய்கிறார்கள், பல தொழில்முனைவோர் உருவாகியிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஆபிஸ் பேஸ் வேண்டும் என்று சிந்தித்து தான் நாம் உருவாக்கியிருக்கும் திட்டம் தான் “முதல்வர் படைப்பகம். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கூட்டத்தை குறைக்கும் வகையில் பெரியார் அரசு மருத்துவமனையில் தரத்தை உயர்த்தவேண்டும் என்று எளிதில் அணுகும் அளவிற்கு மருத்துவம் கிடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு பெரிய மருத்துவமனையை உருவாக்கி ஸ்டான்லியை விட, ராஜிவ் காந்தி மருத்துவமனையை விட, கிண்டியில் அமைந்திருக்கக்கூடிய அரசு மருத்துமனையை விட, சிறப்பான மருத்துவமனையில் ஒன்றாக இன்றைக்கு பெரியார் அரசு மருத்துவமனை விளங்கிக் கொண்டிருக்கிறது. பல்லவன் சாலை, ஜவகர் நகர் 1வது வட்டச் சாலை, ரங்கசாமி தெரு, சீனிவாசா நகர் என்று பல்வேறு இடங்களில் விளையாட்டுத் திடல்கள் என்று கொளத்தூரில் திரும்பும் பக்கமெல்லாம், புதிய புதிய கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக தான், இன்றைக்கு, ரூ.17.47 கோடியில் ஜி.கே.எம்.காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி ஆகியவற்றிற்கான திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறோம். இன்றைக்கு மாநகராட்சி பள்ளியை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில் தான் அதிகம். மருத்துவமனையை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில் தான் அதிகம். நூல் நிலையங்களை எடுத்துக் கொண்டால், கொளத்தூரில் தான் அதிகம். அனைத்திலும் நாம் தான் அதிகம். இன்றைக்கு அந்த அளவிற்கு நம்முடைய திட்டங்கள், சாதனைகளை இந்த தொகுதிக்கு நாம் படைத்து வழங்கியிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
