×

கரூர் சம்பவத்தில் எந்நேரத்திலும் சிபிஐ விசாரணை நடத்தும் என்பதால் அதிமுக, பாஜ பற்றி விமர்சிக்காத விஜய்: பெருந்துறையில் பொட்டி பாம்பாக அடங்கினார்

ஈரோடு: தவெக தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன்பிறகு கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர், கடந்த 11ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார். கரூர் சம்பவத்துக்கு பின் தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை பகுதியில் 19 ஏக்கர் பரப்பளவில் உள்ள காலியிடத்தில் விஜய் கலந்துகொண்ட ‘மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ நேற்று நடந்தது.

இதில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் பேசியதாவது:
உங்களை நம்பித்தான் வந்துள்ளேன்… வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தினால், இன்னும் 3 மாவட்ட மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். இந்தியாவுக்கே இடஒதுக்கீடுக்காக போராட்டம் நடத்தியவர் தந்தை பெரியார். 100 ஆண்டுகளுக்கு முன்பே ஏழைகளுக்கு பிரதிநிதித்துவம் கேட்டார். பெரியாரிடம் இருந்து நாங்கள் கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். அவரை பின்தொடர்ந்த அறிஞர் அண்ணா, எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் வழிமுறைகளை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் குறிப்பிட்ட யாருக்கும் சொந்தம் அல்ல. அவர்கள், எல்லோருக்கும் சொந்தம். 2026ல் தேர்தல் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். ஏன்னா… எங்களுக்கு நிறைய வேலை இருக்குது. திமுக-தவெகவுக்கு இடையேதான் போட்டி. இவ்வாறு விஜய் பேசினார்.

இக்கூட்டத்தில் நடிகர் விஜய், மதியம் 11.56 மணிக்கு பேச துவங்கினார். 12.28 மணிக்கு தனது பேச்சை நிறைவுசெய்தார். மொத்தம் 32 நிமிடம் மட்டுமே பேசினார். அவர், தனது பேச்சில், தமிழக அரசையும், திமுகவையும் பற்றி மட்டுமே விமர்சனம் செய்து பேசினார். அதிமுக, பாஜ பற்றி ஒருவார்த்தைகூட விமர்சனம் செய்யவில்ைல என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சு முடிவில், தனது செல்போனில், கூட்டத்தினரையும் சேர்த்து, செல்பி எடுத்துக்கொண்டார்.

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தவெக நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி முடித்துவிட்டது. விஜய்யிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ள பாஜ, ஊழல் வழக்குகளை காட்டி அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துவிட்டது. பாமகவை கூட்டணிக்குள் இழுக்க அன்புமணி மீது உள்ள சிபிஐ ஊழல் வழக்கை காட்டி மிரட்டி வருகிறது. இதேபோல், சிபிஐ வழக்கை காட்டி தவெகவை இழுக்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நேரடியாக களமிறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்யின் குடுமி ஒன்றிய அரசிடம் சிக்கி உள்ளதால், முதல் பிரசாரம் தொடங்கிய போது, பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஒன்றிய அரசை சினிமா டயலாக் பேசி கிண்டல் செய்த விஜய் சமீபத்தில் நடந்த புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நேற்று பெருந்துறையில் நடந்த கூட்டத்தில் பாஜவை பற்றி வாய் திறக்காமல் பொட்டி பாம்பாக அடங்கி விட்டார்.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜ, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினர் அமைதியை சீரகுலைக்க நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த பிரச்னை குறித்து இதுவரை விஜய் வாய் திறக்கவில்லை. இதுபற்றி பேசினால் பாஜவுக்கு கோபம் வரும் என்பதால் அமைதியாக உள்ளார். இதேபோல், நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை ஒன்றிய அரசு நீக்கிவிட்டது. இதற்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதை பற்றி விஜய் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டியா?விடுங்கப்பா விஜய் எஸ்கேப்
கூட்டம் முடிந்து விஜய் சென்னை செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரின் காரை மடக்கிய பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டி, பேட்டி வேண்டும் என கேட்டனர். கார் ஜன்னல் வழியாகவும் அவரிடம் பேட்டிக்காக மைக் நீட்டினர். இதை கவனித்த விஜய் விடுங்கப்பா என்னை என்ற ரீதியில் எதுவும் கூறாமல் சிரித்தபடி கையை காட்டியபடி காரில் வேகமாக சென்றார்.
முதல்வர், துணை முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் என பல்வேறு கட்சி தலைவர்கள் நிருபர்களின் கேள்விகளை எதிர் கொண்டு பேட்டியளிக்கின்றனர். ஆனால் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து நடிகர் விஜய் இதுவரை பேட்டி கொடுத்ததில்லை. தொடர்ந்து அவர் மீடியாவில் பேச தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

எழுதிய பேப்பர் காற்றில் பறந்ததால் பேச்சு நிறுத்தம்
தவெக தலைவர் விஜய் நின்று பேசியபோது, ‘ஸ்பீச் காப்பி’ பேப்பர் திடீரென காற்றில் பறந்தது. இதனால், விஜய் தொடர்ச்சி இல்லாமல் பேசினார். ஒரு கட்டத்தில் விஜய் பேச்சை இடைநிறுத்தி, காற்றில் பறந்து கொண்டிருந்த பக்கத்தை ஒழுங்குப்படுத்தி, பின்னர் பேச தொடங்கினார்.

புதிய கட்சி ஆரம்பித்த நிறையபேரை காணோம்… நயினார் பஞ்ச்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே சந்தைமேடு பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசுகையில், ‘புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர் வருவார்கள். அவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். உங்கள் வாக்கு வீணாக கூடாது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணி பார்க்க வேண்டும்’ என்றார்.

ரகசிய சந்திப்பு கடைசியில் ‘கட்’
ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்த விஜய், நீலாம்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவார். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களை தவெகவில் சேர்ப்பார். சிலரை ரகசியமாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் ஓட்டலுக்கு செல்லாமல் நேரடியாக காரில் ஈரோடு புறப்பட்டு சென்று விட்டார். மதியம், ஓட்டலில் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. விழா முடிந்து மதியம் கார் மூலமாக ஈரோட்டில் இருந்து கோவை வந்த விஜய், ஓட்டல் பக்கம் செல்லாமல் நேரடியாக விமான நிலையம் சென்று மதியம் 2 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags : Adimuka ,Baja ,Bhoodura ,CPI ,Karur ,Erode ,Daveka ,Vijay Karur ,People's Meeting ,Puducherry ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...