காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் அறுவடை நேரத்தில் வெங்காயப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சித்தனேந்தல், சொக்கனேந்தல், மறைக்குளம், தேனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருபோகம் வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் 700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். பயிர் சாகுபடியின் துவக்கத்தில் இருந்து மழை பெய்ததால், வெங்காய பயிர்கள் நன்கு வளர்ந்து காய் பிடித்து அறுவடைக்கு தயாராகி வந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் காரியாபட்டி பகுதியில் கனமழை பெய்தது.
இதனால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கி வெங்காயப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அறுவடை நேரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் காய்கள் அழுகி அதிக இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வெங்காயம் அறுவடை நேரத்தில் கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 500 ஏக்கர் வெங்காயம் மழைநீரில் மூழ்கியது. கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளோம்’ என தெரிவித்தனர்.
