மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் குடிநீர் வசதியின்றி சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் தினமும் சொகுசு பேருந்து மற்றும் கார்களில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் தாகத்தை தீர்க்க கடற்கரை கோயில் வளாகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை கோயில் முதலாவது நுழைவு வாயில் அருகே 5 குழாய்களும், இரண்டாவது நுழைவு அருகே 1 குழாய் என மொத்தம் 6 குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தங்கு தடையின்றி குடிநீர் வந்தது.
கடந்த சில வாரங்களாக இந்த குடிநீர் குழாய்கள் தண்ணீர் வராமல் காட்சி பொருளாக உள்ளது. புராதன, சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு தாகத்தோடு குழாய்களில் தண்ணீர் குடிக்க வரும் பயணிகள் தண்ணீர் வராமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தொல்லியல் துறை நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு சுற்றுலாப் பயணிகளின் தாகத்தை தீர்க்க கடற்கரை கோயில் வாளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
