- மோடி அரசு
- Jawahirullah
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- எம் எச் ஜவஹிருல்லா
- சட்டமன்ற உறுப்பினர்
- யூனியன் அரசு
சென்னை: மோடி அரசின் புதிய திட்டம் தொழிலாளர் உரிமைகளை முற்றிலும் தகர்க்கும் சதித்திட்டமாகும் என்று ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: புதிய தொழிலாளர் குறியீடுகளை ஒன்றிய அரசு அமல்படுத்தும் முயற்சி, தொழிலாளர்களின் பல தசாப்த போராட்டங்களால் பெற்ற உரிமைகளை மெல்ல மெல்லப் பறிக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும்.
இந்த குறியீடுகள் “சீர்திருத்தம்” என்ற பெயரில், உண்மையில் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொழிலாளர்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும், பேச்சுவார்த்தை அதிகாரத்தையும் பெருமளவில் குறைக்கும் அபாயகரமான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. புதிய குறியீடுகளின் மூலம் 12 மணி வேலை நேரம் வழக்கமாக்கப்பட வாய்ப்புள்ளது.
300 தொழிலாளர்களுக்கு கீழ் பணியமர்த்தும் நிறுவனங்கள், தொழிலாளர்களை அரசு அனுமதியின்றி நீக்கலாம் என்கிற வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இது நிலையான வேலைவாய்ப்பை குறைத்து, ஒப்பந்த மற்றும் தற்காலிக வேலைகளை அதிகரிக்கும். நீண்ட வேலை நேரம், பாதுகாப்பு குறைவு, இரவு வேலை பற்றிய சலுகைகள் அனைத்தும் நிறுவன விருப்பப்படி பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
இது பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகம் சார்ந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். ஒன்றிய அரசு இந்த தொழிலாளர் விரோத குறியீடுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது தொழிலாளர் நலனுக்கான சட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக தொழிலாளர் உரிமைகளை முற்றிலும் தகர்க்கும் சதித்திட்டமாகும். தமிழ்நாடு அரசு தொழிலாளரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தனிச்சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
