×

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசா தான் இப்போதும் வசூலிக்கிறீர்களா? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் வசூலிக்கிறீர்களா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல நிறுவனங்கள், நீர் வரி பாக்கியை தராமல் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தனியார் சிமென்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்கள் நீர் வரி பாக்கியை செலுத்தாமல் தொடர்ந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இதனால் அரசுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது. தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டிய ரூ.250 கோடிக்கும் அதிகமான நீர் வரி பாக்கியை வசூலித்து, அந்த நிதியை ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக்கு பயன்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். பொதுப்பணித்துறை தரப்பில், ‘‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசா என்ற கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆனால், அவர்களிடம் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் இன்றும் வசூலிக்கிறீர்களா? எத்தனை நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கின்றன? ஒரு நாளைக்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது? இதுவரை எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது? இதற்காக நிர்ணயித்த தொகை எவ்வளவு என்பது குறித்து நெல்லை கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

Tags : Thamirabarani ,Court ,Madurai ,High Court ,Kamaraj ,Thoothukudi ,High Court… ,
× RELATED மகளிர் உரிமைத் தொகை டிச.12ம் தேதி...