×

எடப்பாடி முதுகில் குத்தினாரா? இல்லையா? ராஜ்யசபா சீட் தர்றேன்னு சொன்னாங்க… ஆனா எந்த வருஷம்னு சொல்லல… சுத்தி வளைச்சு மூக்கை தொடும் பிரேமலதா

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்போது நாங்கள் யாருடன் கூட்டணி என கூறவில்லை. யார், யாருடன் கூட்டணி என தற்போது உறுதியாக சொல்ல முடியாது. நிறைய மாற்றங்கள் வரும். வாக்கு திருட்டு என்பது நடக்கக் கூடாது. எஸ்ஐஆர்க்கு நாங்கள் நிச்சயம் ஆதரவு கிடையாது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026ல் தேமுதிகவிற்கு நிச்சயம் ராஜ்யசபா எம்பி சீட் தரப்படும் என ஏற்கனவே கூறியுள்ளார். ராஜ்யசபா எம்பி சீட் கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டார் என சொல்ல முடியாது.  ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக உறுதி செய்யப்பட்டது தான். ஆனால் அப்போது நாங்கள் வருடம் போடவில்லை. வருடம் போட வேண்டும் என கேட்டபோது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே இதுபோன்ற பழக்கம் இல்லை என கூறிவிட்டனர்.

உறுதியாக ராஜ்யசபா எம்பி சீட் தரப்படும் என கூறினார். எந்த வருடம் என சொல்லாததால் நாங்கள் 2025 என நினைத்துவிட்டோம். ஆனால் அவர்கள் 2026 என கூறியுள்ளனர். இது சின்ன குளறுபடிதானே தவிர, இதற்காகத்தான் கூட்டணி மாறுகிறது என இல்லை. இதுதொடர்பாக நான் எந்த அறிக்கையும் விடவில்லை. முதுகில் குத்திவிட்டார் என நான் எங்கும் கூறவில்லை. சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தின்போது, நான் சொல்லாத வார்த்தை அது. இவ்வாறு தெரிவித்தார்.

* தலைவருன்னா ஆளுமை இருக்கணும் விஜய்க்கு அட்வைஸ்
பிரேமலதா மேலும் பேசுகையில், ‘‘நேற்று முளைத்த காளான் என பேசியது விஜய்யை இல்லை. விஜய் எங்கள் வீட்டு பையன் என்றுதான் கூறிவருகிறோம். விஜய் தன்னை நிருபிக்கட்டும். தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் விஜயகாந்த். தலைவர் என்பவர் ஆளுமைமிக்கவராக இருக்க வேண்டும். விஜய்க்கு நாங்கள் என்றும் எதிர்ப்பு தெரிவித்து பேசியது இல்லை.

நான் பேசுவது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தை பொறுத்து. விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் சினிமாவில் சாதித்தது போல் சாதிக்க வேண்டும் என அட்வைஸ் செய்கிறோம். கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியானது அனைவர் மனதிலும் நீங்காத ஒரு வடுவாக உள்ளது. அவர் களத்துக்கு வரட்டும், அரசியலில் தன்னை நிரூபிக்கட்டும்’’ என தெரிவித்தார்.

Tags : Edappadi ,Premalatha ,Karaikudi ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,Karaikudi, Sivaganga district ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்