×

நிதிஷ் அமைச்சரவையில் ஊழல்பேர்வழிகள், கிரிமினல்கள்: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பெட்டையா: பீகாரில் நிதிஷ்குமாரின் புதிய அமைச்சரவை ஊழல்வாதிகள், குற்றவாளிகளால் நிரம்பியுள்ளது என ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார். பீகார் பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காததால் அந்த கட்சியின் நிறுவனர் மேற்கு சம்பராண் மாவட்டத்தில் ஒரு நாள் மவுன விரதம் இருந்தார். அதன் பின்னர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் அமைச்சரவை முழுவதும் ஊழல்வாதிகள், கிரிமினல் குற்றவாளிகளால் நிறைந்துள்ளது. இது போன்ற ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டது மாநில மக்களின் முகத்தில் விழுந்த அறை என்று தான் சொல்ல வேண்டும். பல ஊழல் தலைவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது காயம் பட்ட இடத்தில் உப்பு தடவுவது போல் ஆகும்.

இது போன்றவர்களை அமைச்சர்களாக நியமித்துள்ளதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மக்களை பற்றி அக்கறை காட்டவில்லை என நிரூபிக்கிறது. தேர்தலுக்கு முன் ஒரு கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.10,000 செலுத்தியுள்ளனர். உலக வங்கி மானியத்தின் மூலம் கிடைத்த பணத்தை பெண்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இதில் நான் சொல்வது தவறு என்றால் அரசு என்னை சிறையில் தள்ளலாம். தேர்தலுக்கு முன் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அறிவித்தபடி பெண்களுக்கு இந்த பணத்தை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பீகார் நவநிர்மாண் சங்கல்ப யாத்திரை வரும் ஜனவரி மாதம் தொடங்கும். இதில், கட்சி தொண்டர்கள் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அரசின் தவறுகளை சுட்டி காட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* மோடிக்கு சிராக் பஸ்வான் நன்றி
ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் நேற்று கூறுகையில், பீகார் அமைச்சரவையில் லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) இரண்டு இடங்களை ஒதுக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் துணை முதல்வர் பதவியை கோருவதன் மூலம் பேராசை கொண்டவன் என யாரும் அழைப்பதை விரும்பவில்லை. மேற்குவங்கம், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணியில் போட்டியிட விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

Tags : Nitish Kumar ,Bihar ,Prashant Kishor ,Pettah ,Jan Suraj Party ,Bihar Assembly elections ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...