பூந்தமல்லி: திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (56). இவரது மனைவி சுலோச்சனா (55). இருவரும் போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று மாலை சொந்த ஊர் செல்வதற்காக போரூர் சுங்கச்சாவடி அருகே பேருந்துக்காக ராஜா காத்திருந்துள்ளார். அப்போது, தனது மனைவி வேறொரு நபருடன் பைக்கில் அங்கு வந்துள்ளார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த ராஜா, மனைவி சுலோச்சனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியநிலையில் ராஜா, பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து சுலோச்சனாவுடன் வந்தவர் மற்றும் அவருடன் வந்த மேலும் 2 பேர் ராஜாவை சரமாரி தாக்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கணவன், மனைவி இருவரும் முகலிவாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடமாக சுலோச்சனாவிற்கும், வேதநாயகம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை ராஜா கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று சொந்த ஊர் செல்வதற்காக ராஜா பேருந்தில் ஏற வந்தபோது கள்ளக்காதலுடன் மனைவி வந்ததை பார்த்து ஆத்திரமடைந்து சுத்தியலால் மனைவியின் மண்டையை உடைத்தது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சுலோச்சனா இறந்தார். ராஜா அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிய கள்ளக்காதலன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
