தியாகதுருகம்: மாணவியை கூட்டு பலாத்கார முயற்சி செய்ததாக போக்சோவில் 2 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தைச் சேர்ந்த விவசாயி மகள், அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த வாரம் பள்ளி சென்று திரும்பிய அவர் வீட்டின் வெளியே விளையாடியபோது அடையாளம் தெரிந்த நபர் வந்து, சைக்கிளில் அமர வைத்து தனது வீட்டிற்கு அருகே யாரும் இல்லா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே அடையாளம் தெரியாத வேறொரு நபர் அங்கு நின்றிருந்த நிலையில், இருவரும் சேர்ந்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு வலுக்கட்டாயமாக பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நீண்ட போராட்டத்திற்குபின் வீடு திரும்பிய சிறுமி, இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் மறுநாள் பள்ளி சென்ற சிறுமி உடல் நலக்குறைவால் சோர்வுடன் காணப்படவே, வகுப்பாசிரியர் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை மாணவி கூறவே அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனே பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெற்றோர் சென்றனர். ஆனால் தியாகதுருகம் போலீசில் முறையிடுமாறு கூறவே, அங்கு சென்ற பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை நேற்று புகார் அளித்தார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவின்பேரில் போக்சோ பிரிவில் 2 பேர் மீது வழக்குபதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறுவனின், மற்றொரு நண்பரையும் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
