×

வாக்காளர் படிவம் திருத்த பணியை புறக்கணித்து வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி, நவ.18: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் படிவம் திருத்த பணியை புறக்கணித்து வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீவிர வாக்காளர் படிவம் திருத்த பணி குறித்து வருவாய் துறையினருக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை எனக்கூறி, தேர்தல் ஆணையத்தை கண்டித்து, தமிழகம் முழுதும், வருவாய் துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக, கூடுவாஞ்சேரியில் இயங்கிவரும் வண்டலூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், தமிழகத்தில் தீவிர வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் முறையாக வழங்கப்பவில்லை.

இதனால், விண்ணப்ப படிவம் வழங்குதல், நிரப்புதல் உட்பட பொதுமக்கள் கேட்கும் பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், ஊழியர்களால் சரியான பதில் கூற முடியவில்லை. முறையான பயிற்சி வழங்காமல், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை தேர்தல் ஆணையம் பழிவாங்குகிறது. ஏற்கனவே பணி சுமையால் வாடி வதங்கும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், தற்போதைய தேர்தல் பணியால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்றனர்.

Tags : Revenue ,Vandalur taluka ,Kuduvanchery ,Tamil Nadu ,
× RELATED இன்றுமுதல் 3 நாள் விவசாயிகள் கூட்டம்: கலெக்டர் தகவல்