×

நாள்தோறும் 50 நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை பெற்று பிஎல்ஓக்களிடம் சமர்ப்பிக்கலாம்: அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அனுமதி

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர் .

இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது ஆகும். அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற கீழ்கண்ட உறுதிமொழியினையும் வழங்க வேண்டும்.

“என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன் எனவும் மேலும் தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950 பிரிவு 31 ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் அறிவேன்”.

இவ்வாறு பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர்க்கு சமர்ப்பிப்பார். வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Electoral ,Chennai ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Chief… ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...