×

மறவபாளையத்தில் இயங்கும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும்


திருப்பூர்,ஜன.5: திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். காங்கேயத்தை அடுத்த மறவபாளையம் கிராம மக்கள் அளித்த மனு: இப்பகுதியில்  புதிதாக கல்குவாரி அமைப்பதற்கான முயற்சி நடக்கிறது. இதனால், அருகில் உள்ள  விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பலரும் பல்வேறு சிரமங்களை  சந்திக்க நேரிடும். எங்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்.  ஏற்கனவே எங்கள் பகுதியில் கல் உடைக்கும் இயந்திரங்களால் வெளிப்படும் புகை,  தூசியால் பாதிக்கப்பட்டு உள்ளோம். கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக  வெடிமருந்து வைத்து உடைப்பதனால் எங்களுக்கு ஒலிமாசு பிரச்னையுடன்  வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கும் சுவாசப் பிரச்னைகள்  ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே இயங்கி வரும் இரண்டு குவாரிகளை தடை செய்ய வேண்டும்.  

மேலும், புதியதாக எந்தவொரு குவாரி அமைப்பதற்கான அனுமதியையும் வழங்க  வேண்டாம். திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு ரத்தினபுரி அவன்யூ குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனு: இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்தும் எந்த அடிப்படை  தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. சாக்கடை வசதிகள் இல்லாததால் வீட்டிற்கு  முன்பு குழி தோண்டி கழிவுநீரை தேக்கி வைக்கிறோம். இதனால், மிகுந்த சுகாதார  சீர்கேடு ஏற்படுகிறது. இதேபோல், தெருவிளக்கு, தார் ரோடு உள்ளிட்ட அனைத்து  அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற வேண்டும் என பலமுறை மனு அளித்தும் எந்த  நடவடிக்கையும் இல்லை, என தெரிவித்துள்ளனர்.

தென்னம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:  எங்கள்  பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மங்கலம் ரோடு குமரன் கல்லூரி அருகில்  இருந்த தனியார் சீட்டு கம்பெனியில் மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம்  வரை செலுத்தி வந்தோம். இதுவரை நாங்கள் பல லட்சம் சீட்டு தொகை  செலுத்தியுள்ளோம். ஆனால், மிக குறைவான தொகையை மட்டுமே சீட்டு கம்பெனியின்  உரிமையாளர் கொடுத்துள்ளார். இதுகுறித்து, கேட்டால்,மிரட்டல் விடுக்கிறார்.  முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் எனவும்  அச்சுறுத்தி வருகிறார். இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களது தொகையை  மீட்டு தர வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

அனைத்துகட்சி சார்பில் அளித்த மனு: அவினாசி  ஊராட்சி பகுதிகளில் காலிங்கராயன் வாய்க்கால் நீர் செறிவூட்டும் திட்டம்,  நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு  பணிகளுக்காக ரோட்டின் ஓரங்களில் குழி தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று  வருகிறது. ஆனால், பணிகள் முடிவடைந்த பகுதிகளில் ரோடுகள்  சீரமைக்கப்படவில்லை. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர், காலேஜ் ரோடு மரக்கடை அருகில் கே.ஆர்.இ லே அவுட் பகுதியில்  பள்ளிவாசல், விநாயகர் கோவில், பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் மருத்துவமனை  அமைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தனியார் மதுபானக்கூடம் மற்றும்  சூதாட்ட விடுதி துவங்கப்பட்டுள்ளது. இதனால், வாகன போக்குவரத்து,  பெண்களுக்கு இடையூறு என பல பிரச்னைகள் உள்ளது.

மேலும், அருகில் பள்ளி  மற்றும் கல்லூரிகளும் செயல்பட்டு வருவதினால் இந்த தனியார் மதுபானக்கூடத்தை  இடம் மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டைக்கு அனுமதிகோரி அளித்த மனு: தமிழ்த்  தேசியக் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்திருந்த சேவல்களை கலெக்டர் அலுவலகம்  முன்பு பறக்கவிட்டு ஆதரவு திரட்டினர். பின்னர், அளித்த மனுவில், தமிழர்  திருநாளான தைப் பொங்கல் நாளில் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்க வேண்டும். இதனை சேவல்  சண்டை விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும்  கேட்டுக்கொள்கிறோம், என்றனர்.

Tags :
× RELATED விபத்தில் தொழிலாளி பலி