×

திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிக வாக்குகள் கிடைத்ததால் நிர்வாகிகள் உற்சாகம்

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் 4 லட்சத்து 72 ஆயிரத்து 739 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாசலத்துக்கு 3 லட்சத்து 46 ஆயிரத்து 811 வாக்குகள் கிடைத்தது. பாஜ வேட்பாளர் முருகானந்தம் பெற்ற வாக்குகள் 1 லட்சத்து 85 ஆயிரத்து 322 ஆகும். பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றார். குறிப்பாக, திருப்பூர் தெற்கு தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 478 வாக்குகள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முன்னிலை பெற்றார். தெற்கு தொகுதி சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு அதிகம் காரணமாக திமுக தெற்கு தொகுதியை வசமாக்கியது. இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிகபட்ச வாக்குகள் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு கிடைத்தது. திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட 134வது வாக்குச்சாவடியில் 668 வாக்குகள் பதிவானதில் இந்திய கம்யூனிஸ்ட் 609 வாக்குகளும், அதிமுக 32 வாக்குகளும், பாஜக 6 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதுபோல் 44-வது வார்டுக்கு உட்பட்ட 138-வது வாக்குச்சாவடியில் 659 வாக்குகள் பதிவானதில் 589 வாக்குகள் இந்திய கம்யூனிஸ்டுக்கும், 50 வாக்குகள் அதிமுகவுக்கும், 3 வாக்குகள் பாஜவுக்கும் கிடைத்துள்ளது. குறிப்பாக 44,45,50 ஆகிய வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 13 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார்.

பாஜகவுக்கு 5 வாக்குச்சாவடிகளில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாக்கு கிடைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்கு கிடைத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தெற்கு தொகுதி திமுக வசமானது. இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் திமுக கூட்டணி பெற்றுள்ளது. சிறுபான்மை மக்கள் திமுக கூட்டணிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மாற்று கட்சியினர் கூட தெற்கு தொகுதி திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என்று தெரிவித்து வந்தனர்.

அதை நிரூபிக்கும் வகையில் அதிகப்படியான வாக்குகள் திமுக கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுகவின் கோட்டையாக மாறி இருக்கிறது என்று கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.  அதேநேரத்தில், குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் பாஜ வேட்பாளர், அதிமுக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். அதுபோல் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுகவை விட பா.ஜக வெறும் 98 வாக்குகளே பின் தங்கியுள்ளது. இதை அதிமுகவின் வீழ்ச்சியா? இல்லை பாஜவின் வளர்ச்சியா? என்று தெரிவித்துள்ளனர்.

The post திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிக வாக்குகள் கிடைத்ததால் நிர்வாகிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Tirupur South Constituency ,Tirupur ,Subparayan ,AIADMK ,Arunachalam ,
× RELATED திருப்பூர் தெற்கு தொகுதியில் அரசு...