சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 9.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 252 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 262 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இழுவை வண்டி வந்து, பழுதடைந்து நின்ற விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. அதோடு விமானத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் விமானம் புறப்பட்டு விடும் என்று கூறி, பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து கீழே இறக்கி விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைத்தனர்.
பிறகு விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பகல் 1 மணி ஆகியும் விமானம் தயாராகவில்லை. இதையடுத்து விமானப் பயணிகள் ஆத்திரமடைந்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். விமானம் மாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்று விடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், மாலை 5 மணிக்கு மேலாகியும் விமானம் புறப்படவில்லை. இதையடுத்து பயணிகள் விமான நிறுவனத்துக்கு எதிராக கோஷங்களிட்டு, உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பயணிகளை அமைதி படுத்தியதோடு, விமானம் உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை. எனவே மாற்று விமானம் இலங்கையில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. அந்த விமானத்தில், பயணிகள் அனைவரும் இரவு 8 மணிக்கு இலங்கை புறப்பட்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையிலிருந்து மாற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இரவு 7.30 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதன் பின்பு பயணிகள் 252 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு புதிதாக போர்டிங் பாஸ்கள் வழங்கப்பட்டன. அதோடு பயணிகள் அனைவரும் இரவு 9 மணி அளவில் மாற்று விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
அதன் பின்பு அந்த விமானம் சுமார் 12 மணி நேரம் தாமதமாக, இரவு 9.30 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. இரவு 10.28 மணிக்கு அந்த விமானம் இலங்கைக்கு சென்றடைந்தது. இவ்வாறு ஒரு மணி நேர பயணமான, சென்னை- இலங்கை பயணத்திற்கு 252 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து அவதிப்பட்டனர்.
