×

நொய்டா விமான நிலையத்திற்காக 14 கிராமங்களில் 4,588 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டம்: 16,000 குடும்பம் வெளியேற்றம்!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விமான நிலைய விரிவாக்க பணிக்காக 14 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் 16,000 குடும்பங்களை வேறு இடத்தில் குடியமர்த்தும் நிலை உருவாகி உள்ளது. டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் தொழிற்பகுதியான நொய்டாவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஜேவாரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் முதற்கட்டமாக ஒரு ஓடுபாதையுடன் செயல்பாட்டிற்கு வர உள்ளது. நாள் ஒன்றுக்கு 150 விமானங்கள் என ஆண்டுக்கு 1கோடியே 20லட்சம் பயணிகளை கையாளும் வகையில் இந்த ஓடுபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்காவது விரிவாக்க பணிகளுக்காக அப்பகுதி மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தும் திட்டத்திற்கு உத்தரப் பிரதேச ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக 14 கிராமங்களில் 4,588 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், 16,000 குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்பட உள்ளன. அவர்கள் மாங்குரோவ், அளவல்பூர் உள்ளிட்ட 6 கிராமங்களில் 1,082 ஏக்கர் பரப்பளவில் குடியமர்த்தப்பட உள்ளன. இதற்காக நில உரிமையாளர்கள் சதுர மீட்டருக்கு 4,300 இழப்பீடு பெறுவார்கள் என்றும், இது முந்தைய நில மதிப்பீட்டை விட 40% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்ட விரிவாக்க பணிகள் முடிந்து முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

நொய்டா சர்வதேச விமான நிலையம் 11,750 ஏக்கர் பரப்பளவில் 5 ஓடுபாதைகளைக் கொண்டிருக்கும். இது ஆண்டுதோறும் 30 கோடி பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு ரூ.5,000 கோடி என்றும் கட்டுமான செலவுகள் சுமார் ரூ.7,000 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்டா விமான நிலையம் முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Noida Airport ,Lucknow ,Noida, Uttar Pradesh ,Indira Gandhi International Airport ,Delhi ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...