×

பீகார், மேற்கு வங்கம் என இரண்டு மாநிலங்களில் பிரசாந்த் கிஷோருக்கு ஓட்டு: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 

கொல்கத்தா: தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல் தலைவராக ஆனவர் பிரசாந்த் கிஷோர். ஜன் சுராஜ் எனும் அரசியல் கட்சியை புதிதாக தொடங்கிய அவர், அடுத்த மாதம் நடக்க உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக கட்சியை களமிறக்கி உள்ளார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் 2 முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரசாந் கிஷோர் மேற்கு வங்கத்தில் 121, காளிகாட் சாலை என்ற முகவரியில் வாக்காளராக பதிவு செய்துள்ளார். இது கொல்கத்தாவின் பபானிபூர் தொகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகத்தின் முகவரி. மேலும், இது முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் சொந்த தொகுதி. பிரசாந்த் கிஷோரின் வாக்குச்சாவடி ராணிசங்கரி லேனில் உள்ள செயின்ட் ஹெலன் பள்ளி என பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே போல பீகார் ரோஹ்தஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் மக்களவை தொகுதியில் வரும் கர்கஹார் சட்டப்பேரவை தொகுதியிலும் பிரசாந்த் கிஷோருக்கு வாக்கு உள்ளது. அவரது வாக்குச்சாவடி கோனாரில் உள்ள மத்திய வித்யாலயா பள்ளி’’ என்றார்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. 1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 17ன்படி எந்தவொரு நபரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்ய முடியாது. இதற்கிடையே இரட்டை வாக்குரிமை குறித்து 3 நாளில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது.

* தேர்தல் ஆணையம் மீதுதான் தவறு

பிரசாத் கிஷோர் உதவியாளர்கள் கூறுகையில், ‘‘மேற்கு வங்கத்தில் உள்ள வாக்கை நீக்கக் கோரி பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் 2 இடங்களில் ஓட்டு உள்ளது. இதில் பிரசாந்த் கிஷோரின் தவறும் எதுவும் இல்லை. தேர்தல் ஆணையம் தான் அதன் வேலையை செய்யாமல் இருந்துள்ளது’’ என்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது, பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags : Prashant Kishor ,Bihar ,West Bengal ,Kolkata ,Jan Suraj ,Bihar assembly ,
× RELATED 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்:...