×

வேலூர் கன்சால்பேட்டையில் மேயருடன் ஆய்வு: மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க ஏற்பாடு

வேலூர்: வேலூர் கன்சால்பேட்டையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை இன்று காலை ஆய்வு செய்த கலெக்டர் சுப்புலட்சுமி, அங்கு வசிக்கும் மக்களை முகாம்களில் தங்கும்படி அறிவுரை கூறினார்.வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாநகரில் பெய்த மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகள், தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று நடைபெற்று வருகிறது. கன்சால்பேட்டை, இந்திரா நகர், முள்ளிபாளையம், காந்திநகர், தொரப்பாடி ஜீவா நகர், விஜி.நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்தது. இம்முகாமில் 7 மருத்துவர்கள், 20 சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

வேலூர் மக்கான் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை கலெக்டர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கன்சால்பேட்டை வீரஆஞ்சநேயர் கோயில் தெருவில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அருகே உள்ள முகாம்களில் தங்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும், அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, இந்திரா நகரில் கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேயர் சுஜாதா, கமிஷனர் லட்சுமணன், மாநகர நல அலுவலர் பிரதாப், தாசில்தார் வடிவேலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Vellore Kansalpettai ,Vellore ,Collector ,Subbulakshmi ,Vellore district ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...