×

8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்..!!

டெல்லி: 8வது ஊதியக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மேம்படுத்துவதற்காக, 8வது ஊதியக் குழுவை அமைக்க ஜனவரி 16, 2025 அன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த ஒப்புதலின்படி, ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இந்த ஊதியக் குழு, ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.

இந்த நிலையில்,8வது ஊதியக்குழுவுக்கு 3 உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 8வது ஊதியக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சஞனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 8வது ஊதியக் குழுவின் உறுப்பினர்/செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டார். பகுதி நேர உறுப்பினராக ஐ.ஐ.எம். பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமிக்கப்பட்டார். குழு செயல்படும் நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். 8வது ஊதியக் குழு வழங்கும் பரிந்துரையால் 50 லட்சம் பணியாளர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

 

Tags : Union Cabinet ,8th Pay Commission ,Delhi ,Union government ,Union… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...