சென்னை: வங்கக்கடலில் உருவான மோன்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பொதுவாக வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை எப்போதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதேநேரம் மழை காரணமாக வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக சென்னையின் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது. சென்னையின் வளர்ச்சி பணிகளின் ஒன்றான மெட்ரோ மற்றும் மேம்பால பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளால் சாலைகள் சுருங்கிவிட்டன. பல சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்கள் செல்லும் சாலைகளில் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. குறிப்பாக, அண்ணா சாலையில் இரும்பு மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களும் தடுப்புகள் அமைத்து பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. அதேபோல் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி முதல் பூந்தமல்லி பகுதிகளின் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, இந்த பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். ஆனால் மழை காரணமாக சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதடைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் நத்தை போல் ஊர்ந்து சென்றன. இதனால் கிண்டி, போரூர், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் பாதிப்பால், கோயம்பேடு மற்றும் மதுரவாயல் வழியாக பூந்தமல்லி செல்லும் வாகனங்களும் எளிமையாக வரமுடியாத வகையில் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன.
சாலை விரிவாக்கம் காரணமாக கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுவாக, பூந்தமல்லி, மதுரவாயல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் இன்ஜினியரிங் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவ கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து பூந்தமல்லி மற்றும் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும் செல்கின்றனர். காலை முதல் மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் 1 முதல் 2 மணி நேரம் காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. அதேபோல் தொழிற்சாலைகளுக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அதிகாலையில் வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள், மழை காரணமாக மதுரவாயல் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மழையால் போக்குவரத்து சிக்னல்கள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் சிக்னல்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் சரிவர சிக்னல்களில் பணிகளில் ஈடுபடாதாலும் அப்பகுதியில் நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.
இதுதவிர பல்லாவரம் மேம்பாலம் தற்போது இருவழி சாலையாக மாற்றப்பட்டதால், சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் வாகனங்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கின. குரோம்பேட்டை மேம்பாலம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாததால், அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர், கானத்தூர் பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மோன்தா புயல் காரணமாக வடசென்னை முழுவதும் அடிக்கடி மிதமான மழை பெய்தது. இதனால் திருவொற்றியூர், எண்ணூர் நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சரக்குகளை ஏற்றிக்கொண்டு துறைமுகத்திற்கு வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் மழை காரணமாக அங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிக்கு செல்வோர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்குள் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தாம்பரம் மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் போன்று, சிக்னல்கள் மற்றும் மெட்ரோ பணிகள் நடைபெறும் குறுகிய சாலைகளில் பணிகளில் ஈடுபட்டால் இதுபோன்ற நெரிசல் ஏற்படாது என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
