நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் மழை காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு, ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் ஒன்றிய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் பி.கே.சிங்க் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் திருச்சி, புதுகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்ட நிலையில் நேற்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பாலக்குறிச்சி, திருவாசல், மூலக்கரை ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பி.கே.சிங்க் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபிட் ஷிவாஜ், ராகேஷ் பராலா ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நெல் மணிகளை எடுத்து ஈரப்பதத்தை கருவி மூலம் சோதனையிட்டனர். முன்னதாக மயிலாடுதுறை வட்டம் கிழாய், குத்தாலம் வட்டம் கந்தமங்கலம், சீர்காழி வட்டம் பழையபாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒன்றிய குழுவினரிடம் விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய குழு வருகிறது. ஈரப்பதம் அளவை உயர்த்த மாதிரிகள் எடுக்கப்படுகிறது. ஆனால் அதன் முடிவை ஒன்றிய அரசு அறிவிப்பதற்குள் 90 சதவீதம் கொள்முதல் முடிந்து விடுகிறது. ஒன்றிய குழு கண்துடைப்பு குழுவாக உள்ளது. எனவே டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கும் போதே 22 சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் நிம்மதியாகவும், முழுமூச்சுடனும் விவசாயத்தை மேற்கொள்வார்கள். இந்த ஆய்வு கண்துடைப்பாக இல்லாமல், கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் விதமாக இருக்க வேண்டும் என்று கூறினர்.
