×

ஆளே இல்லாத கடையில டீ போடுறது மாதிரி.. இந்தியாவில் மாணவர் சேர்க்கை இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள்: ஒன்றிய கல்வி அமைச்சகம் ஒப்புதல்

புதுடெல்லி: “இந்தியா முழுவதும் மாணவர் சேர்க்கை நடக்காத 8,000 பள்ளிகள் உள்ளன. இதில் 20,000 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்” என ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா கல்வி அறிவில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்த சூழலில் ஒன்றிய பாஜ அரசு புதிய தேசிய கல்வி கொள்கை 2020-ஐ கொண்டு வந்தது. புதிய தேசிய கல்வி கொள்கைaயின் முக்கிய நோக்கம், “அங்கன்வாடியில் இருந்து மேல்நிலைக்கல்வி வரை மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 2030ம் ஆண்டுக்குள் 100 சதவீதமாகவும், மற்றும் 2025ம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாகவும் உயர்த்தி கல்வியை உலக மயமாக்கல் செய்வதுதான்” என ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஆனால், 2024-25ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 8,000 பள்ளிகளில ஒரு மாணவர் கூட சேரவில்லை என தகவல் வௌியாகி உள்ளது. இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “2024-25ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இந்த மாணவர் சேர்க்கை நடக்காத பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தம் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது இது கடந்த 2023-24 கல்வியாண்டில் இருந்த 12,954 என்ற எண்ணிக்கையை விட 5,000 பள்ளிகள், அதாவது 38% குறைவு.

இதில் மேற்குவங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 3,812 மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் 17,965 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இரண்டாவதாக, தெலங்கானாவில் மாணவர் சேர்க்கை நடைபெறாத 2,245 பள்ளிகளில் 1,016 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். மூன்றாவதாக மத்தியபிரதேசத்தில் 463 மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் 223 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் மாணவர்கள் சேராத பள்ளிகள் 81 மட்டுமே உள்ளன.
அரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சலபிரதேசம், சட்டீஸ்கர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய 9 மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ, சண்டிகர் மற்றும் டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் எதுவும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒற்றை ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகள் குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள தரவுகளில், “நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 33 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் ஆந்திரபிரதேசம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்திலும், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இருப்பினும் ஒற்றை ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை பொறுத்தவரை உத்தரபிரதேசம் முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 2023-24 கல்வியாண்டில் 1,18,190ஆக இருந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2023-24 கல்வியாண்டில் 1,10,971ஆக குறைந்து, 6 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India ,Union Education Ministry ,New Delhi ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...