புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக தொடர்ந்து கொலை, கொள்ளை என பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுச்சேரி காவல்துறை டிஜிபி, டிஐஜி, ஐ.ஜி, எஸ்.எஸ்.பி மற்றும் காவல் துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி இரவு நேரங்களில் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வில்லியனூர் மேற்கு எஸ்.பி. சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் வில்லியனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான காவலர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் இணைந்து இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தொண்டமாநத்தம் பகுதியில் வழிப்பறி செய்வதற்காக கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை வில்லியனூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், அவரிடம் இருந்த கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் சாத்தராக் (36) என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான இவர் மீது தமிழக மற்றும் புதுச்சேரியில் கொலை, கொள்ளை, திருட்டு, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தொண்டமாநத்தம் பகுதியில் வழிப்பறி செய்வதற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வில்லியனூர் போலீசார் சாத்தராக் மீது வழக்குப்பதிந்து கைது செய்து மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
