*தண்ணீர் திறப்பு தற்காலிக நிறுத்தம்
கூடலூர் : தேனி மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக 18-ம் கால்வாயில் 8க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் உடைந்து கால்வாய் நீர் வீணாக சென்று கொண்டிருந்தது. அதனால் பொதுப்பணித்துறையினர் தற்போது 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம், லோயர் கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து வைரவன் வாய்க்கால் மூலம் 18ம் கால்வாய்க்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 2 மாதம் தாமதமாக டிசம்பர் மாதம் தான் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் நடைபாண்டில் வழக்கமான கடந்த அக்.1ம் தேதி 18ம் கால்வாயிலிருந்து பாசனப்பகுதிகளுக்கு 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக நீர்வளத்துறையின் கீழ் உள்ள தேனி மாவட்டம் 18ம் கால்வாய் (பழனிவேல் ராஜன் கால்வாய்) மூலம் உத்தமபாளையம், போடிநாயக்கனூர் தாலுகாக்களில் உள்ள 13 கிராமங்களில் ஊடாக 40.80 கிலோ மீட்டர் தூரம் இந்த கால்வாய் மூலம் கூடலூர் ,கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி , உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், தே.சிந்தலச்சேரி, சங்கராபுரம், வேம்பக்கோட்டை, பொட்டிபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, கோடாங்கிபட்டி என போடி என சுத்தகங்கை ஓடை வழியாக கூவலிங்க ஆறு வரை வரை உள்ள 4614.25 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் நேரடியாகவும், சுமார்1500 ஏக்கர் மானாவாரி நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.
இந்த 18ம் கால்வாய் மூலம் உத்தமபாளையம் மற்றும் போடி வட்டாரத்தில் கோம்பை புதுக்குளம், தேவாரம் சின்னதேவி, பெரிய தேவியம்மன் கண்மாய் உள்ளிட்ட உள்ள 51 கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு பாசன விவசாயம் நடைபெறுவதோடு, சுற்று வட்டார பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீராதாரமும் அதிகரிக்கிறது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த அக்.17ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல பகுதிகளில் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பயிர்கள் வீடுகள் சேதமடைந்தன.
இதில் ஆற்றின் கரையோரம் இருந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. இந்த மழை வெள்ளத்தால் 18ம் கால்வாய் தண்ணீர் மூலம் காட்டாற்று வெள்ளத்தால் கால்வாயின் 8க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் உடைந்து, நீர் விவசாய நிலங்கள் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் புகுந்தது. எனவே உடைப்புகளை சரி செய்தால் மட்டுமே தொடர்ந்து 18ம் கால்வாய் மூலம் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில், கடந்த அக்.19ம் தேதி முதல் கால்வாயிலிருந்து பொதுப்பணித்துறையினர் தண்ணீர் திறப்பதை நிறுத்தி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகள், சேதங்களை சரி செய்யும் பணியில் மஞ்சளாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் சேதங்கள் அதிகமாக இருப்பதால் இதை சரி செய்வதற்கு கூடுதல் நாட்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரியாறு – வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் மனோகரன் கூறுகையில்: வருடத்திற்கு ஒருமுறை பதினெட்டாம் கால்வாயிலிருந்து தண்ணீர் திறப்பிற்கு முன்னதாகவே கால்வாயை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரை உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த ஆண்டு கால்வாய் சீரமைப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் தமிழ்நாடு அரசு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட முடியாமல் கால்வாய் முழுமையாக தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெறாமலேயே இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.
எனவே வருங்காலத்தில் இதுபோன்று நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க தண்ணீர் திறப்புக்கு முன்பே முறையான பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்து முடிக்க வேண்டும். இன்னும் கால்வாயில் தலை மதகிற்கு முன்பாக கால்வாயில் கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதத்தின் கீழே நீர் கடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய் போதிய கொள்ளளவு இல்லாததால் அதிகமான நீர் வெளியேறியதில் கரை உடைந்ததோடு குழாயும் உடைந்துள்ளது.
எனவே கால்வாய் நீரோடு மழை நீரும் எளிதில் வெளியேறும் வண்ணம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாய் அளவை அதிகரிக்க வேண்டும் அல்லது ஒன்றிலிருந்து எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18ம் கால்வாயை சீரமைப்பு பணிக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், போர்கால அடிப்படையில் கரை உடைப்புகளை சீர் செய்து, பழுது பார்ப்ப பணிகளை முழுமையாக செய்து முடித்து கடைமடை வரை 18ம் கால்வாய் தண்ணீர் பயன்பெறும் வண்ணம் துரிதமாக செய்து முடிக்க வேண்டும்.
மேலும் 30 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரை, பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்களோடு கூடுதல் நாட்களுக்கு அதாவது 120 நாட்களுக்கு கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு தற்போது இருப்பதால் கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமாகும். மேலும் தற்போது ஒரு போகத்திற்கு மட்டும் பதினெட்டாம் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி 18ம் கால்வாய் பாசன பரப்பில் ஆண்டுக்கு இருமுறை இரண்டு போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும்’’என்றார்.
