×

கொச்சி – தனுஷ்கோடி சாலை விரிவாக்கத்தின்போது நிலச்சரிவில் 8 வீடுகள் மண்ணில் புதைந்தன: கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மூணாறு: கேரளாவில் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மூணாறு அருகே நடந்து வருகிறது. இதற்காக நேரியமங்கலம் முதல் மூணாறு வரை சாலையின் இரு பாகங்களிலும் மண் அகற்றப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் அடிமாலி அருகே லட்சம் காலனி பகுதியில் சாலையோரத்தில் மண் அகற்றபட்ட போது திடீரென மண் சரிவு ஏற்பட்டு, அந்த வழியே போக்குவரத்து தடை ஏற்பட்டது.

பின்னர், உடனடியாக கூடுதல் மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, மண் அப்புறப்படுத்தப்பட்டு சாலையின் ஒருபுறமாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை மீண்டும் அப்பகுதியில் சாலைப்பணிகளுக்காக கூடுதல் மண் அகற்றப்பட்டது. அப்போது, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவானது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

லட்சம் காலனி பகுதியில் வசிக்கும் 25 வீடுகளில் உள்ளவர்களும் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணி அளவில் பெரிய சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் இருந்த 8 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. அந்த நேரத்தில், தனது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுப்பதற்காக வந்த பிஜூ, அவரது மனைவி சந்தியா ஆகியோர் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி சந்தியாவை உயிருடன் மீட்டு, அடிமாலியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சந்தியாவின் கணவர் பிஜூவை 7 மணிநேர தேடுதலுக்கு பின் சடலமாக நேற்று மீட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 25 குடும்பங்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Kochi-Dhanushkodi ,Munnar ,Kochi-Dhanushkodi National Highway ,Kerala ,Neriyamangalam ,Adimali… ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...