சென்னை: தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: இந்த மன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்துரிமை வசதி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அறிவுசார் சொத்துரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காப்புரிமைகள் போன்றவற்றை பதிவு செய்யவும், அதற்கு ஏற்பட்ட செலவுகளை திரும்ப பெறவும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள், புவிசார் குறியீடுக்கு ரூ.2 லட்சம், உள்நாட்டு காப்புரிமை ரூ.1 லட்சம், வெளிநாட்டு காப்புரிமை ரூ.5 லட்சம், தொழில்துறை வடிவமைப்புகள் ரூ.15,000, வர்த்தக முத்திரை ரூ.10,000 வரை திரும்ப பெறலாம். மேலும், கண்டுபிடிப்பாளர்களுக்கும், தொழில்துறைக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையத்தின் நிறுவன ஆவணங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டு ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
