×

மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்; 2 ஆஸி. வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட வந்தவர்களிடம் அத்துமீறல்

இந்தூர்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாட மத்தியபிரதேசம் சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில நடந்து வருகிறது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் திடலில் கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளிடையேயான போட்டி நடைபெற்றது. நேற்று நடந்த கடைசிப்போட்டியில், தென்ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலிய அணி மோத இருந்தது. இதற்காக ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் அக்.17ஆம் தேதி முதல் இந்தூரில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் தங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இரண்டு பேர் நேற்று முன்தினம்(24ம் தேதி) காலை 11 மணி அளவில் ஓட்டலுக்கு அருகேவுள்ள ரிங் சாலையில் இருக்கும் ஒரு கபேவுக்கு சென்று விட்டு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த ஒருவர் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் உடல்களில் விரும்பத்தகாத இடங்களில் தொட்டார். மேலும் பெண் வீராங்கனைகளை கட்டிப்பிடிக்கவும் முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வீராங்கனைகள் உடனே தங்கள் அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்சுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இருக்கும் லொக்கேஷனை ஷேர் செய்துவிட்டு, கட்டிப்பிடிக்கவும், அத்துமீறவும் முயன்ற நபரை எதிர்த்து நின்றனர். இதையடுத்து பைக்கில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

ஆஸி வீராங்கனைகள் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த அந்த நபர் சுமார் 30 வயதுடையவர், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிந்தவர், ஹெல்மெட் இல்லாமல் கருப்பு நிற பைக்கில் வந்துள்ளார். இதற்கிடையே அணி பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உயர் அதிகாரிகள் உடனே செயல்பட்டு அணியின் தொடர்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வீரர்களுக்கு உதவ பைலட் போலீசார் வீராங்கனைகள் அனுப்பிய லொக்கேஷன் இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் ஒரு காவல் ரோந்துப் பிரிவு சம்பவ இடத்திற்கு சென்று கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பாக ஓட்டலுக்கு அழைத்துச் சென்றது.

போலீசார் வந்ததும் பாதுகாப்பு மேலாளர் சிம்மன்சுக்கு அந்த வீராங்கனைகள் உள்ளூர் போலீசார் வந்து விட்டனர். எங்களை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு வருகிறார்கள் என்று மீண்டும் செல்போனில் தெரிவித்தனர். இதுபற்றி ஆஸி அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ் வியாழக்கிழமை மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,
அதைத் தொடர்ந்து பிஎன்எஸ் பிரிவுகள் 74 மற்றும் 78ன் கீழ் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்தூர் போலீசார் அதிரடியாக செயல்பட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சந்தேக நபரின் பைக் எண்ணை வைத்து ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை கைது செய்தனர். போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டவர் அகில்கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்தது என்ன? வாக்குமூலம் பதிவு;
இந்தூரில் உள்ள குற்றப்பிரிவு கூடுதல் டிசிபி ராஜேஷ் தண்டோதியா கூறுகையில், ‘ ஒரு கபேயில் இருந்து ஓட்டலுக்குத் திரும்பும்போது இரண்டு வீராங்கனைகள் தகாத நடத்தையை எதிர்கொண்டதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புக் குழுவிடமிருந்து எங்களுக்கு புகார் வந்தது. வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.
இதற்கிடையே ஆஸி வீராங்கனைகள் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், இந்தூர் உதவி காவல் ஆணையர் ஹிமானி மிஸ்ரா இரு வீராங்கனைகளையும் சந்தித்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். அவர்கள் அப்போது என்ன நடந்தது என்பதை விளக்கமாக கூறியுள்ளனர். இதையடுத்து எப்ஐஆர் பதிவு செய்தார். கைது செய்யப்பட்ட அகில்கான் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதான் பா.ஜ ஆட்சியின் யதார்த்தம்;
திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறுகையில்,’ பாஜ ஆளும் இந்தூரில் ஐ.சி.சி ஏற்பாடு செய்த உலக கிரிக்கெட் போட்டிக்கு வந்த இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். நினைவில் கொள்ளுங்கள், இது இரட்டை எஞ்சின் அரசாங்க ஆட்சியின் போது நடக்கிறது. இது முழு உலகத்தின் முன் நம் தலையைத் தாழ்த்தியுள்ளது’ என்றார். திரிணாமுல்செய்தித் தொடர்பாளர் சுதீப் ரஹா கூறுகையில்,’ முற்றிலும் கொடூரமானது! இந்தூரில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்! பாஜ ஆட்சியின் கீழ் மகளிர் உரிமையின் யதார்த்தம் இதுதான்’ என்றார்.

வெட்கக்கேடானது; பா.ஜ அமைச்சர்: மபி பா.ஜ அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,’ இது வெட்கக்கேடானது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நாட்டின் கவுரவம் தொடர்பான விஷயம்’ என்றார்.

ஆஸி.வீராங்கனைகள் பாதுகாப்பு இல்லாமல் எப்படி வெளியே வந்தார்கள்?- மத்தியபிரதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் பண்டிட் கூறுகையில்,’ இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதனால் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோல் நடக்க கூடாது. இந்த துயரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆதரவும் உள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு மபி கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த அனைவரையும் ஆழமாகப் பாதித்துள்ளது, அவர்கள் பெண்களின் மரியாதை, பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் மதிப்புகளைப் போற்றுகிறார்கள்.
இவ்வளவு நடந்தும் இந்த வேதனையான அனுபவத்தைத் தாண்டி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸி வீராங்கனைகள் தைரியத்துடனும் உறுதியுடனும் தொடர்ந்து போட்டியிடுவதைப் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.

பல ஆண்டுகளாக, இந்தூர் வருகை தரும் அணிகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு பாதுகாப்பான இடமாக பெருமைமிக்க நற்பெயரைப் பெற்றுள்ளது. ஒரு தனிநபரின் ஒழுங்கற்ற செயல் இவ்வளவு தீங்கு விளைவித்தது மட்டுமல்ல நகரத்தின் பிம்பத்தின் மீது இருளை ஏற்படுத்தி இருப்பது மிகவும் வேதனையானது. எங்கள் நகரம் பாதுகாப்பு, கருணை, விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. இந்த ஆழ்ந்த துயரமான மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகம் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டுள்ளது. அணிகள் தங்கள் விருப்பப்படி கோயில் மற்றும் பொழுதுபோக்கு தளங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வீரர்கள் ஓட்டலுக்கு வெளியே செல்ல பாதுகாப்பு கோரினார்களா அல்லது பாதுகாப்பு இல்லாமல் வெளியே சென்றார்களா என்பதை ஆராய வேண்டியது அவசியம். ஏனெனில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பிரத்யேக பாதுகாப்பு அதிகாரி, பிசிசிஐயால் நியமிக்கப்பட்ட இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஓட்டலில் உள்ளூர் போலீசார் இருப்பதையும் மீறி பாதுகாப்பு குழுவிற்கு தெரிவிக்காமலோ அல்லது அனுமதி பெறாமலோ வீராங்கனைகள் எப்படி ஓட்டல் வளாகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை’ என்று கூறினார்.

Tags : Madhya Pradesh ,Women's World Cup cricket ,Indore ,India ,Sri Lanka ,Madhya Pradesh… ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...