புதுடெல்லி: மகாராஷ்டிராவில் இரண்டு வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரில் உள்ள இந்திராநகர் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி, இரண்டு வயது பச்சிளம் சிறுமியை சாக்லேட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற ரவி அசோக் குமரே என்ற நபர், அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக் கொடூரமாகக் கொலை செய்தான். மனசாட்சியே இல்லாத இந்தச் செயலுக்காக விசாரணை நீதிமன்றம் அவனுக்கு 2015ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.
இதனை 2016ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றமும், பின்னர் 2019ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தன. அப்போது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘குற்றவாளியின் செயல் வக்கிரமான மனநிலையைக் காட்டுகிறது; இது மிகக் கொடூரமான செயல்’ என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தூக்குத் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காகக் குற்றவாளி ரவி அசோக் குமரே ஜனாதிபதிக்குக் கருணை மனு ஒன்றை அனுப்பியிருந்தான்.
இந்த மனுவைப் பரிசீலனை செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரிக்கும் மூன்றாவது கருணை மனு இதுவாகும். ஜனாதிபதியின் இந்த முடிவின் மூலம், பச்சிளம் குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற குற்றவாளிக்கான தூக்குத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.
