சென்னை: உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேரவை தேர்தலையொட்டி இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். இதுவரை 65 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். மேலும் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் சக்கரபாணி, திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளையும் முதல்வர் கேட்டறிந்தார். பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், நிர்வாகிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.
