ஆரணி: மனைவி பிரிந்து சென்றதால் பள்ளி மாணவியை காதலித்த கூரியர் ஊழியர் சரமாரி கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முக்குறும்பை ஊராட்சி அனந்தபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவியின் மகன் வடிவேல் (27). இவர், ஆரணியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தமிழ்பிரியா. சில மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறில், கணவரைப் பிரிந்து தமிழ்பிரியா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வடிவேலு, அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 16 வயது மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஊர் பெரியவர்கள் சமரசம் செய்துள்ளனர். அதன்பிறகும் வடிவேல், மாணவியிடம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை விவசாயி சங்கர்(46), வடிவேலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, நேற்று காலை முக்குறும்பை அருகே அனந்தபுரம்- களம்பூர் செல்லும் சாலையில் உள்ள சிவன் கோயில் அருகே சங்கர், அவரது உறவினர் சிவஞானம் (48) ஆகிய இருவரும் காத்திருந்துள்ளனர்.
அவ்வழியாக வழக்கம்போல் கூரியர் அலுவலகத்துக்கு பைக்கில் சென்ற வடிவேலை வழிமறித்து சிறுமியுடன் பழகுவதை கைவிட வேண்டும் எனக்கூறி மிரட்டி உள்ளனர். இதில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் சிவஞானம் ஆகிய இருவரும் சேர்ந்து வடிவேலை கட்டையாலும், கற்களாலும் சரமாரி தாக்கி உள்ளனர். இதில் வடிவேல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வடிவேலின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் களம்பூர் பஸ் நிறுத்தத்தில், ஆரணி-போளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதையடுத்து சங்கர், சிவஞானம் ஆகியோ ரை போலீசார் கைது செய்தனர்.
