- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தொல்காப்பியம் பூங்கா
- சென்னை
- ராஜா அண்ணாமலை புரம், சென்னை
- சென்னை ஆறுகள் மீட்சி அறக்கட்டளை
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை…
சென்னை: சென்னையில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம். பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், பூங்கா பணிகள் நிறைவுற்று 22.01.2011 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவினை மேம்படுத்திட ஜூலை 2021-ஆம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக ‘தொல்காப்பியப் பூங்கா மறுமேம்பாட்டு’ பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிருவாக அனுமதி வழங்கியது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert) அமைக்கப்பட்டுள்ளது.
‘தொல்காப்பியப் பூங்கா’, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு, சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகின்றது. இயற்கை சூழ்நிலை நிறைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 3.20 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை 1.10.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் அவர்கள், பூங்காவினை மக்களின் முழு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதன்படி, இன்றையதினம் தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மீண்டும் கொண்டுவரப்பட்டது.
மேலும், முதலமைச்சர் அவர்கள் சுற்றுச்சூழல் கல்வியினை குறிப்பாக சென்னை மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெற்றிடும் வகையில், மாணவர்களுக்கான பிரத்யேக சுற்றுச்சூழல் கல்விச்சுற்றுலா (Students’ Eco-Tour) ஏற்பாடுசெய்யவும். தொல்காப்பியப் பூங்காவினை பார்வையிடும் அனைத்து மாணவர்களுக்கும் (அரசு / தனியார் பள்ளி) ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டி வழங்கிடவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்கள் (ஒருவேளையில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் பொது விடுமுறை நாட்கள் தவிர இணையதள முன்பதிவின் மூலம் பார்வையிடலாம்.
மேலும், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள் (பள்ளி /கல்லூரி) அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம். பள்ளிகள் அனுமதிக்கப்படும் நாட்கள்: சென்னை மாநகராட்சி பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை; அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் வெள்ளிக்கிழமை; தனியார் பள்ளிகள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை. பூங்காவின் பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை விடப்படும்.
அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உட்பட) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
தொல்காப்பியப் பூங்கா பார்வையாளர்கள் நேரம் மற்றும் நுழைவு கட்டண விவரங்கள்
மேலும் நுழைவுசீட்டு கட்டணம், முன்பதிவு மற்றும் பிற விவரங்கள் www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர். தா.கார்த்திகேயன். இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.வி.சேகர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
