நாகப்பட்டினம், அக்.24: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை நீரால் பாதித்த நெற்பயிர்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி முதல் விட்டு விட்டு கன மழை பெய்தது. இந்தநிலையில் மழை விட்டும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள 1500 ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக நாகப்பட்டினம் அருகே கிராமத்து மேடு, சின்னத்தும்பூர், வடகரை, ஆலமழை, ராராத்திமங்கலம், எட்டுக்குடி உள்ளிட்ட இடங்களில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்த நிலையில் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்கத் துவங்கி உள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படடுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே ராராத்தி மங்கலம் பகுதியில் மழைநீரால் பாதித்த குறுவை பயிரை கலெக்டர் ஆகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.
