தாராபுரம், டிச.13: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ளது குண்டடம். இந்த ஊர் கால்நடை சந்தைகளில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட அளவில் இரண்டாவது பெரிய சந்தை என்ற சிறப்பு பெற்றுள்ளது. குண்டத்தில் அருணகிரிநாதரால் பாட பெற்ற நூற்றாண்டுகளைக் கடந்த வடுகநாத சுவாமி பைரவர் திருக்கோயில் உள்ளது. இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக குண்டடம் நகரின் எல்லைப்பகுதியிலேயே அமைந்துள்ள ருத்ராவதி பேரூராட்சியின் சார்பில் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை கட்டி அதில் கடைகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு பணிகள் முடிந்தன.
ஆனால், கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக இப்பேருந்து நிலையத்திற்குள் இவ்வழியாக செல்லும் எந்த ஒரு பேருந்துகளும் வந்து செல்வதில்லை. அதே போல், பயணிகள் யாரும் புதிய பேருந்து நிலையத்திற்கு வராததால் அங்குள்ள கடைகளும் வியாபாரிகளால் வாடகைக்கு எடுப்பது தவிர்க்கப்பட்டு தற்போது சுற்றிலும் முள் புதர்கள் முளைத்து மதுபான பிரியர்களின் திறந்த வெளி பாராக மாற தொடங்கி விட்டதாக குண்டடம் பகுதி சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டும் ஏன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் காளியப்பன் கூறுகையில், ‘‘குண்டடம் வட்டார விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ருத்ராவதி பேரூராட்சியின் சார்பில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் பயன்படுத்தப்படாமல் முட்புதர்கள் வளர்ந்து வருகிறது. எனவே விரைவாக பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.
