- சபரிமலை
- தேவஸ்வம் வாரியம்
- துணை ஆணையாளர்
- திருவனந்தபுரம்
- சபரிமலை ஐயப்பன் கோவில்
- சென்னை
- உன்னிகிருஷ்ணன் போதி
- சென்னை…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டிருந்த வாசல், நிலை ஆகியவை கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் தங்கமுலாம் பூசுவதற்காகவும், அவை பழுதடைந்து விட்டதாகவும் கூறி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி என்பவர் தான் இவற்றை சென்னைக்கு கொண்டு சென்றார். அப்போது சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு இந்த தங்கத்தகடுகள் அனைத்தும் செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் அளித்திருந்தார்.
இந்த மோசடி குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் உண்ணிகிருஷ்ணன் போத்தியை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபுவை நேற்று முன்தினம் இரவு பெருன்னாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வந்து நேற்று மாலை வரை அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தங்கம் மாயமான விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்த முக்கிய விவரங்களை முராரி பாபு போலீசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின் அவரை போலீசார் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து முராரி பாபுவை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
* தங்கத்தகடு என தெரிந்தும் செம்பு தகடு என சான்றிதழ்
நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் உண்ணிகிருஷ்ணன் போத்தியுடன் சேர்ந்து முராரி பாபு சதித்திட்டம் தீட்டி உள்ளார். 1998ல் கோயிலில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட விவரம் முராரி பாபுவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவை செம்புத்தகடுகள் என்று தெரிந்தே தான் அவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். முராரி பாபு லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார். இவ்வாறு ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
