×

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்பதால் வட மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நேற்று முன்தினம் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று வலுவிழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

அதன் காரணமாக தமிழகத்தில் 82 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று வரையில் 108 மிமீக்கு பதிலாக 198.2 மிமீ மழை கூடுதலாக பெய்துள்ளது. இந்நிலையில் தமிழக வளி மண்டலத்தில் காற்று சுழற்சி ஒன்று இன்னும் நீடித்துக் கொண்டுள்ளது. அத்துடன் அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி ஒன்றும் தற்போது ஆந்திர கடலோரப் பகுதிக்கு நகர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் தென்சீனக் கடலில் இருந்து தெற்கு அந்தமான் பகுதிக்கு ஒரு காற்று சுழற்சியும் வருகிறது.

ஏற்கனவே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சிகள் அனைத்தும் இன்று, ஒன்றிணைந்து ஒரு காற்றழுத்தம் அல்லது காற்றழுத்த தாழ்வுப்பகுதியை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் 26ம் தேதி புயலாக உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் 26ம் தேதி கரையை நெருங்கினால் தமிழகத்தில் தீவிர மழை பெய்யும். விலகிச் சென்றால் மழை தாமதமாக பெய்யும்.

அதன் காரணமாக வட கடலோரத்தில் நேற்றும் அனேக இடங்களில் மழை பெய்தது. மேலும், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். இதன் காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்றும் மேற்கண்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். 25ம் தேதி ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 26, 27ம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 29ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 25ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதேபோல மத்திய மேற்கு வங்கக் கடலின் தென்மேற்கு பகுதிகளில் 25, 26ம் தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலின் அனேக இடங்கள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

* வங்கக் கடலில் 3 காற்று சுழற்சிகள் நிலை கொண்டுள்ளன.
* இவை அனைத்தும் இன்று, ஒன்றிணைந்து ஒரு காற்றழுத்தம் அல்லது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்.
* இது மேலும் வலுப்பெற்று 26ம் தேதி புயலாக உருவாகும் வாய்ப்புள்ளது.
* ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Bay of Bengal ,Meteorological Department ,Chennai ,southeast Bay of Bengal ,central-east Bay of Bengal ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்