- சென்னை
- வங்காள விரிகுடா
- வட தமிழகம்
- பிரதீப் ஜான்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தென்மேற்கு வங்காள விரிகுடா
சென்னை: வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகத்தை ஒட்டி நகர்ந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து தமிழகத்தை ஒட்டி நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என வானிலை மையம் கணித்துள்ளது. இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது: ஆரம்பத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டாலும், இன்று வெளியான அறிக்கையில், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது மண்டலமாக மாறுவதற்கே வாய்ப்பு குறைவு. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலப்பகுதிக்கு மிக அருகே இருப்பதால், அது அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் ட்ரப்-புடன் இணைந்து நிலப்பகுதிக்குள் சென்றுவிடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்திற்குள் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளின் ஊடே நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது நிலப்பகுதியை ஒட்டி நகர்வதால், இதை ‘கரையை கடக்கும்’ நிகழ்வாகக் கருத முடியாது. இந்த நகர்வின் காரணமாக வடதமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது . நேற்று கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. எனினும், இன்று முதல் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்குமான மழையின் தீவிரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆந்திரா ஒட்டிய பகுதிகளிலும், தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் மட்டும் இன்று கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. சென்னையில் கூட வானம் தெளிவாகி, அவ்வப்போது விட்டு விட்டு பெய்யும் மழைக்கான வாய்ப்பே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
