×

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது ஏன்? காவல்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2006-11ம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரித்து ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கை வேலூருக்கு மாற்ற மறுத்ததை எதிர்த்து துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் என்று விரிவாக பதில்மனு தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Tags : Minister Durai Murugan ,Vellore ,Chennai Special Court ,Court ,Chennai ,Anti-Corruption Bureau ,Shanthakumari… ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்