புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் குறித்து பேசியதாக டிரம்ப் தெரிவித்தார். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகின்றார். இதற்காக இந்தியா மீது இரண்டு மடங்கு வரியையும் அவர் விதித்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா-அமெரிக்கா உறவில் அதிருப்தி மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இதனை இந்தியா மறுத்திருந்தது. இதனிடையே சமீப நாட்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி கூறியதாக அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் , வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப், பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ‘பிரதமர் மோடி சிறந்த மனிதர்; எனக்கு சிறந்த நண்பர். இந்த நிகழ்ச்சிக்குச் சற்று முன்பு கூட நான் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். வர்த்தகம் மற்றும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். குறிப்பாக, பாகிஸ்தானுடன் எந்தப் போரும் வேண்டாம் என்ற அவசியத்தையும் அவரிடம் வலியுறுத்தினேன்’ என்று கூறினார்.
இந்தக் கொண்டாட்டத்தில், இந்திய வம்சாவளிகளான எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கபார்ட் மற்றும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். இதனிடையே பிரதமர் மோடியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் மோடி,”அதிபர் டிரம்ப் உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி. இந்த தீபத் திருநாளில் நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நம்பிக்கையுடன் உலகை ஒளிரச் செய்து தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக ஒற்றுமையாக நிற்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
⦁ 15 சதவீதமாக வரி குறையுமா?
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெற்றிகரமாக நிறைவேறும்பட்சத்தில் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியானது 50 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு நிகழ்ந்தால் இது இந்திய ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இது தொடர்பாக இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் மற்றும் வெள்ளை மாளிகை உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
