சென்னை: அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு அனுமதி கோரி தொடர்ந்து வழக்குகள் தொடரப்படுவதால் இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உரிய விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற பெயரில் கடந்த ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.
திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஜூலை 25ல் நடைபயணத்தை அன்புமணி தொடங்கினார்.
நுாறு நாள் நடைபயணத்தில், அடுத்த பகுதியாக, ஈரோட்டில் மூன்று இடங்கள் மற்றும் திருப்பூரில் குமரன் சாலை முதல் மாநகராட்சி அலுவலகம் வரை, நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி, திருப்பூர் வடக்கு மற்றும் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. செயலர்கள், கடந்த 9ம் தேதி மாவட்ட காவல்துறையிடம் மனு அளித்தனர். அனுமதி கோரிய இடங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்று கூறி நடைபயணத்துக்கு அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரித்தனர்.
இதை எதிர்த்து, திருப்பூர், ஈரோடு மாவட்ட பா.ம.க., செயலாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், அனுமதி கோரிய மனுக்களை மாவட்ட காவல்துறை மனதை செலுத்தாமல் நிராகரித்து உள்ளனர். எந்த காரணமும் குறிப்பிடாமல் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுக்கள், நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, இரண்டு மாவட்டங்களிலும் வேறு இடங்கள் மற்றும் தேதி மாற்றம் செய்து புதிதாக அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது என்றார். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, மனுதாரர்கள் தரப்பில் அனுமதி கோரி புதிதாக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, புதிதாக மனுதாரர்கள் தரப்பில் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்து அந்தந்த மாவட்ட காவல்துறை உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுக்களை முடித்து வைத்தார். அரசியல் கட்சிகள் கூட்டங்களுக்கு அனுமதி கோரி தொடர்ந்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால் இவ்விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி விதிகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி ஆலோசனை வழங்கினார்.
* பாமக தலைவர் அன்புமணி நடைபயணத்துக்கு நிர்வாகிகள் அனுமதி கோரிய இடங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்று கூறி மனுவை போலீசார் நிராகரித்தனர்.
