×

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிப்பில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், தமிழகம் முழுவதும் உள்ள 4,500 டாஸ்மாக் கடைகளில் 1479 கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில், நவம்பர் இறுதிக்குள் ஒரே கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காலி மதுபாட்டில்களை விற்றதன் மூலம் 26 கோடியே 96 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களின் குறைகள் தொடர்பாக அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் உரிய அதிகாரிகள் முன் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 90 லட்சம் பாட்டில்கள் விற்கப்படும் நிலையில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். மேற்கொண்டு எந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. நீர்நிலைகளில், பொது இடங்களில், வயல் வெளிகளில் ஒரு காலி பாட்டில் கூட காண முடியாத நிலையை உருவாக்க திறமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : TASMAC ,Madras High Court ,Chennai ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...