- உன்னிகிருஷ்ணன் போதி
- சபரிமலை
- திருவனந்தபுரம்
- ரன்னி நீதிமன்றம்
- சபரிமலை ஐயப்பன் கோவில்
- சபரிமலை ஐயப்பன் கோவில்…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து கிலோக்கணக்கில் தங்கம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உண்ணிகிருஷ்ணன் போத்தியை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க ரான்னி நீதிமன்றம் போலீசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று கூறி அவற்றை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்று மோசடி செய்த சம்பவத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த மோசடி குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்கத் தகடுகளை செம்புத் தகடுகள் என்று கூறி அவற்றுக்கு இலவசமாக தங்கமுலாம் பூசித்தருவதாக சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி தான் இந்த இரண்டிலும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தவிர திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள் 9 பேரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சிறப்பு புலனாய்வுக் குழு ஐதராபாத், சென்னை, திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகம் மற்றும் சபரிமலையில் விசாரணை நடத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் உண்ணிகிருஷ்ணன் போத்தியை திருவனந்தபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடியாக கைது செய்தது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய போலீசார் நேற்று ரான்னி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது பல முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டி இருப்பதால் உண்ணிகிருஷ்ணன் போத்தியை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவரை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து உண்ணிகிருஷ்ணன் போத்தியை போலீசார் மீண்டும் திருவனந்தபுரத்திற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
* துவாரபாலகர் சிலைகளில் தங்கத்தகடுகள் பொருத்தப்பட்டன
கடந்த மாதம் சபரிமலை கோயிலின் முன்புறமுள்ள 2 துவாரபாலகர் சிலைகளில் இருந்த 14 தங்கத்தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. அனுமதி இல்லாமல் இவற்றை கொண்டு சென்றதற்கு கேரள உயர்நீதிமன்றம் தேவசம் போர்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தங்கத்தகடுகள் சமீபத்தில் சென்னையிலிருந்து திரும்ப கொண்டு வரப்பட்டன. இந்தத் தகடுகள் நேற்று துவாரபாலகர் சிலைகளில் மீண்டும் பொருத்தப்பட்டன.
* 2 கிலோ தங்கம் மோசடி
உண்ணிகிருஷ்ணன் போத்தியை கைது செய்த சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் ரிமாண்ட் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருந்த முக்கிய விவரங்கள் வருமாறு: ஸ்பான்சர் என்று கூறி சபரிமலையில் அறிமுகமான உண்ணிகிருஷ்ணன் போத்தி 2 துவாரபாலகர் சிலைகள், கோயில் நிலை மற்றும் வாசலில் பதிக்கப்பட்டிருந்த 2 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று கூறி ஏமாற்றி மோசடி செய்துள்ளார். தங்கத்தகடுகளை ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னைக்கு கொண்டு சென்றுள்ளார்.
பெருமளவு தங்கத்தை எடுத்த பின்னர் 394 கிராம் தங்கத்தை மட்டும் தகடுகளில் பூசி தேவசம் போர்டுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளார். அதுமட்டுமில்லாமல் தங்கத்தகடுகளை ஐதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் கொண்டு சென்று அவற்றை காண்பித்தும், பூஜை நடத்தியும் பண மோசடியும் செய்துள்ளார். இவர் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* என்னை சிக்க வைத்தவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவேன்
உண்ணிகிருஷ்ணன் போத்தியை 14 நாள் காவலில் எடுத்த பின்னர் போலீசார் அவரை ரான்னி நீதிமன்றத்தை விட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, என்னை சிக்க வைத்தவர்களை நான் சட்டத்தின் முன் கொண்டு வருவேன் என்று கூறினார். யார் உங்களை சிக்க வைத்தது என்று கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை.
* செருப்பை வீசிய பாஜ தொண்டர்
உண்ணிகிருஷ்ணன் போத்தியை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வெளியே கொண்டு வந்தனர். அவரை பார்ப்பதற்காக நீதிமன்றம் முன் பாஜவினர் உள்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது திடீரென பாஜ தொண்டர் ஒருவர் உண்ணிகிருஷ்ணன் போத்தி மீது செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
* கோயில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு தந்திரி மகேஸ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடை திறந்தார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதிஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளும், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் தொடங்கும். இன்று உஷபூஜைக்குப் பின்னர் சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெறுகிறது. குடவோலை முறைப்படி மேல்சாந்தி தேர்வு நடைபெறும். பந்தளம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் திருவுளச்சீட்டு மூலம் மேல்சாந்திகளை தேர்வு செய்வார்கள்.
