×

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 121 தொகுதியில் மனுத்தாக்கல் நிறைவு: இந்தியா கூட்டணியில் பல தொகுதிகளில் நட்பு ரீதியிலான போட்டியால் குழப்பம்

பாட்னா: பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடக்கிறது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் பீகார் சென்றார். இன்று வரை அங்கு தங்கியிருக்கும் அவர் தேர்தல் பணிகளை முடுக்கி விட உள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் நேற்று முன்தினம் விடிய விடிய ததொகுதிப் பங்கீடு பேச்சு நடந்தது. இருப்பினும் தொகுதி உடன்பாடு குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த தேர்தலில் 144 தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம் சுமார் 140 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட 70 இடங்களைக் காட்டிலும் குறைவாக, 61 இடங்களிலும், கூட்டணியில் இருந்து வெளியே செல்லும் என்று பா.ஜவால் எதிர்பார்க்கப்பட்ட முகேஷ் சஹானி தலைமையிலான விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு, சுமார் 15 இடங்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிக்கு 18 இடங்களும், இதர இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே காங்கிரஸ் தனது 48 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதையடுத்து நேற்று முதற்கட்ட வேட்புமனுத்தாக்கல் முடிந்த 121 தொகுதிகளில் பா.ஜ, இந்தியா கூட்டணி கட்சியினர் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாலையுடன் மனுத்தாக்கல் நிறைவடைந்தது. இன்று மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 20ஆம் தேதி கடைசிநாள். அன்று 121 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். 2ஆம் கட்ட தேர்தல் நடக்கும் 122 தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய வரும் திங்கட்கிழமை கடைசி நாள் ஆகும். இதனால் வேட்பாளர்கள் விறுவிறுப்பாக மனுத்தாக்கல் செய்தனர். இந்தியா கூட்டணியில் முறையாக தொகுதி உடன்பாடு ஏற்படாததால் பல வேட்பாளர்கள் நட்பு ரீதியில் போட்டியாக மனுத்தாக்கல் செய்தனர். இதனால் நேற்று உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.

* நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி இல்லையா?
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் யார்? என்பதை கூட்டணி கட்சிகள் கூடி முடிவு செய்யும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது, தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* 2.6 கோடி குடும்பங்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்?
பீகாரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை என்ற தேஜஸ்வியின் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா,’பீகாரில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. சுமார் 20 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் உள்ளன. இப்போது, ​​தேஜஸ்வி யாதவ் 2.6 கோடி குடும்பங்களுக்கு அரசு வேலைகள் தருவதாக உறுதியளித்துள்ளார். இவ்வளவு வேலைகளை வழங்க, ரூ.12 லட்சம் கோடி தேவைப்படுகிறது, சம்பளம் கொடுக்க எங்கிருந்து பணம் வரும்?’ என்று அவர் கேட்டார்.

* லாலுகட்சி பிரமுகரை வேட்பாளராக அறிவித்த காங்.
பீகாரில் உள்ள ஜலே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லாலுகட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ரிஷி மிஸ்ரா நிறுத்தப்பட்டுள்ளார். இருகட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளராக ரிஷி மிஸ்ரா வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது தாத்தா லலித் நாராயண் மிஸ்ரா, இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். அவரது இன்னொரு தாத்தா ஜெகநாத் மிஸ்ரா பீகார் முதல்வராக இருந்தார்.

* பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்பட பீகார் தேர்தலில் பாஜ சார்பில் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
* பீகாரில் பிரபல தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஷாஹாபுதீனின் மகன் ஒசாமா, ராஷ்ட்ரீய ஜனதாதளம் வேட்பாளராக சிவான் மாவட்டம் ரகுநாத்பூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
* பீகாரை சேர்ந்தவர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தியதாக தவறான தகவல் பரப்பி 2023ல் கைதான சமூக ஊடக பிரபலம் மணீஷ் காஷ்யப், பீகாரின் சன்பதியா தொகுதியில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

Tags : Bihar Assembly Elections ,Bharatiya Janata Party ,Patna ,Bihar ,National Democratic Alliance ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...