×

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு முடிக்காமல் இந்தியா கூட்டணி இழுபறி: 243 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ கூட்டணி, 121 தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

பாட்னா: 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. நவம்பர் 6 அன்று 121 தொகுதிகளுக்கும் நவம்பர் 11 அன்று 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து 243 தொகுதிகளுக்கும் அந்த கூட்டணி கட்சியினர் நேற்று வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். பா.ஜ 101 தொகுதிகளுக்கும், முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையில் செயல்படும் மகாகத்பந்தன் என்று அழைக்கப்படும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியவில்லை. முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள 121 தொகுதிகளுக்கு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். ஆனால் தொகுதி பங்கீடு முடியாததால் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்களாகவே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் சார்பில் 16 பேர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குளறுபடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய நேற்று லாலுபிரசாத், தேஜஸ்வியாதவ் ஆகியோருடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் அடிப்படையில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 140 தொகுதிகளிலும் காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

* பர்தா சோதனை சரிதான்
பீகார் வாக்குச் சாவடிகளில் பர்தா அல்லது புர்கா அணிந்த பெண்களின் அடையாளத்தை சரிபார்க்கும் உத்தரவு சரிதான். இந்த உத்தரவு 1994 ஆம் ஆண்டு டி.என். சேஷன் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது எடுக்கப்பட்டது. தற்போது அது செயல்படுத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* தேஜ் பிரதாப் யாதவ் மனுத்தாக்கல்
ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து லாலுபிரசாத் யாதவால் நீக்கப்பட்ட அவரது மகன் தேஜ்பிரதாப் யாதவ், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஜனசக்தி ஜனதாதளம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது மறைந்த பாட்டியின் புகைப்படத்தை ஏந்தி தனது ஆவணங்களை சமர்ப்பித்தார்.

Tags : Bihar Assembly Elections ,Bharatiya Janata Party ,BJP ,Patna ,National Democratic Alliance ,NDA ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...