×

மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் பவானி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்தது

 

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் பவானி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து ஆர்.கே.சாலை நிலையத்தை வந்தடைந்தது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பவானி இராயப்பேட்டை நிலையத்திலிருந்து ஆர்.கே. சாலை நிலையம் வரை 910 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து ஆர்.கே. சாலை நிலையத்தை வந்தடைந்தது. இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது TU02 ஒப்பந்தப் பிரிவில் ஐந்தாவது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு (breakthrough) ஆகும்.

இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), எம்.ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஜெயராம், திட்ட மேலாளர் அஹ்மத், பொது ஆலோசகர் நிறுவனத்தின் அணித்தலைவர் டோனி புர்செல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், லார்சன் & டூப்ரோ நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் பவானி இராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் பீட்டர்ஸ் பாலம் ஆகியவற்றின் கீழும், இராயப்பேட்டை கண் மருத்துவமனையின் பாரம்பரியக் கட்டிடம் ஆகியவற்றை கடந்து வந்துள்ளது. சுரங்கப்பாதையின் மேற்பகுதியில், அதாவது மண்ணின் மேற்பரப்பிற்கும் சுரங்கப்பாதைக்கும் இடையே 8 முதல் 14 மீட்டர் வரை தூரம் உள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வண்டல் கலந்த மணல் மற்றும் களிமண் போன்ற புவியியல் அமைப்புகளை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது.

கிரீன்வேஸ் சாலை இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தற்போது மந்தைவெளி பகுதியை வந்தடைந்துள்ளது. இந்த இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்களும் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags : Bhavani ,Chennai ,R.K. Road station ,Chennai Metro Rail Corporation ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...