×

கோபி அருகே பயங்கரம் அணையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வெட்டி படுகொலை: மகன் படுகாயம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரும்பள்ளம் அணை. இந்த அணை சத்தியமங்கலம் புலிகள் காப்பக எல்லையில் மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது. அணையில் உள்ள மீன்களை பிடித்து விற்பனை செய்யும் குத்தகை உரிமையை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெற்று உள்ளார். அணையில் உள்ள மீன்களை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பிடித்து சென்று விடுவதால், கே.என்.பாளையம் ரைஸ் மில் வீதியை சேர்ந்த சக்திவேல் (55) என்பவரை காவல் பணிக்காக நியமித்து உள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு கே.என்.பாளையம் நரசாபுரத்தை சேர்ந்த வேதனாண்டி (எ) அய்யப்பன் (52), மற்றும் அவரது மகன் மாதேஸ் (30), ஆகியோர் பெரும்பள்ளம் அணையில் மீன் பிடிக்க சென்றனர். அங்கு காவல் பணியில் இருந்த சக்திவேல் அய்யப்பனிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது இது குத்தகைக்கு விடப்பட்ட இடம் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன் சக்திவேலுவிடம் தகராறு செய்துள்ளார். இதனால், சக்திவேல் அவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் மற்றும் கவுதம் ஆகியோரை அங்கு அழைத்து வந்து அய்யப்பன் மற்றும் மாதேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அய்யப்பனையும் அவரது மகன் மாதேசையும் சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்த அய்யப்பன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மாதேஸ் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், தந்தை மற்றும் மகனை வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (51), பெரியசாமி (35), கவுதம் (23), சவுந்திரராஜன் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Bayankaram dam ,Gopi ,Perumpallam dam ,Erode district ,Sathyamangalam Tiger Reserve ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்